November 15, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியின் 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் சூயஸ் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய்கள் அமைத்த பிறகு, குழாய் பதித்த இடங்களில் சாலை சீரமைத்தல் மற்றும் வெட்மிக்ஸ் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அதன்படி கோவை மாநகராட்சிக்குட்பட்ட சாரமேடு மெயின் ரோடு, மணியகாரன்பாளையம், ராகாச்சி கார்டன் மெயின் ரோடு, தில்லை நகர், குறிஞ்சி கார்டன், பி.ஆர்.பி. கார்டன், பாலசுந்தரம் பிரதான சாலை, எம்.ஜி.ரோடு, பாரதி நகர், ஜே.கே.கார்டன், ரோஸ் கார்டன், ஏ.கே.எஸ்.நகர், பொன்னையராஜபுரம் மெயின் ரோடு, கோபால் லே-அவுட், சொக்கம்புதூர் மெயின் ரோடு போன்ற பல்வேறு இடங்களில் கடந்த 6ம் தேதி முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் மூலம் சுமார் 9,200 நீளம் அளவுக்கு சாலை சீரமைத்தல் மற்றும் வெட்மிக்ஸ் சாலை போடப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறுகையில்,
‘‘இப்பணிகளை விரைவாக மேற்கொள்ள 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஜே.சி.பி. உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள் மூலம் சாலை சீரமைத்தல் பணி விரைவாக நடைபெற்று வருகிறது’’ என்றார்.