November 15, 2021 தண்டோரா குழு
ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கோவை மாவட்டம் செம்மேடு கிராமத்தில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் ‘பூச்சிகளை கவனிங்க’ என்ற தலைப்பில் விவசாய களப் பயிற்சி நவ.13, 14 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. பிரபல பூச்சியியல் வல்லுனர் செல்வம் இப்பயிற்சியை நேரடியாக நடத்தினார்.
இதில் கோவை, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, தூத்துக்குடி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 54 விவசாயிகள் பங்கேற்றனர். அவர்கள் பல்வேறு வகையான பூச்சி வகைகளின் தன்மைகள் மற்றும் பயன்களை அனுபவப்பூர்வமாக தெரிந்துகொள்ளும் வகையில் இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டு இருந்தது. விவசாயிகள் தனிக் தனி குழுவாக பிரிந்து சென்று பண்ணையில் இருந்த பூச்சிகளை பார்வையிட்டனர்.மேலும்,பூச்சிகளை பிடித்து வந்து ஆய்வு செய்தனர்.
பூச்சிகளின் உடல் அமைப்பு பற்றி விரிவாக புரிந்துகொள்வதற்காக விவசாயிகளே பூச்சிகளின் படங்களை வரைந்தனர். குறிப்பாக, இயற்கை விவசாயத்தில் பூச்சிகளின் பங்கு, நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள், நன்மை செய்யும் பூச்சிகளை வரவழைக்கும் வழிமுறைகள், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை ஆகியவை குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
பூச்சிக்கொல்லிகளின் அதீத பயன்பாட்டால் தான் பயிர்களில் விஷத்தன்மை அதிகரிக்கிறது. ஆகவே, இதை முற்றிலும் தடுக்கும் விதமாக இயற்கை முறையில் பூச்சிகளை மேலாண்மை செய்யும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த விவசாயி கார்த்திகேயன் அவர்கள் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டபோது,
“ஈஷா ஏற்பாடு செய்துள்ள இந்த பயிற்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக பூச்சிகளைப் பற்றிய என்னுடைய கண்ணோட்டம் வேறாக இருந்தது. இப்போது அது முற்றிலும் மாறிவிட்டது. பூச்சிகளில் நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் என இரண்டு வகையான பிரிவு இருப்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நாம் எவ்வித பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பூச்சிகளை மேலாண்மை செய்ய முடியும் என்பதை இந்த பயிற்சி மூலம் தெரிந்து கொண்டேன். இயற்கை விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த பயிற்சி மேலும் ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கிறது” என்றார்.
புதுக்கோட்டை விவசாயி ராமச்சந்திரன் கூறுகையில்,
“நான் ஈஷாவின் பல்வேறு விவசாய பயிற்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். குறிப்பாக, இந்த ‘பூச்சிகளை கவனிங்க’ என்ற பயிற்சியின் மூலம் பூச்சி மேலாண்மை குறித்து நான் விரிவாக தெரிந்து கொண்டேன். இந்த பயிற்சி வெறும் வகுப்பறை பயிற்சியாக மட்டுமின்றி, நேரடியாக தோட்டத்திற்கு சென்று செய்முறை விளக்கத்துடன் நடத்தியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. காலையிலும் இரவிலும் தோட்டத்திற்கு சென்று, அங்கு எந்தெந்த மாதிரியான பூச்சிகள் வருகின்றன, அவற்றின் வகைகள் மற்றும் தன்மைகளை நேரடியாக பார்த்து தெரிந்து கொண்டது புதிய அனுபவமாக இருந்தது. இயற்கை விவசாயம் செய்வதற்கு இந்த பயிற்சி எனக்கு மேலும் உதவிகரமாக இருக்கிறது. நான் கற்றுக்கொண்ட விஷயங்களை எங்கள் கிராமத்தில் உள்ள மற்ற விவசாயிகளும் பகிர ஆர்வமாக உள்ளேன்” என்றார்