November 16, 2021 தண்டோரா குழு
கோவை ஜெம் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு மையத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தாா்.
கோவை,ஜெம் மருத்துவமனையில் கல்லீரல் உள்பட பல்வேறு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரத்யேகமாக குழந்தைகளுக்கான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு மையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை
தொடங்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் மசானிக் குழந்தைகள் நல மருத்துவமனை ஆலோசகா் ராமசாமி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா உள்ளிட்டோா் கலந்துகொண்டாா்.
இம்மையத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார்.
அப்போது விழாவில் பேசிய அவர்,
ஏழை, எளியவா்களுக்கும் அனைத்துவிதமான சிகிச்சைகளும் இலவசமாக கிடைக்கும் வகையில் முதல்வா் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.பெரும்பாலான நோய்களுக்கு உடல் உழைப்பு இல்லாததே முக்கிய காரணம். இதனால் அனைவரும் கட்டாயம் உடல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மாணவா்களிடத்தில் உடற்பயிற்சி பழக்கம் ஏற்பட விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
ஜெம் மருத்துவமனை தலைவா் சி.பழனிவேலு பேசியதாவது:
கோவை ஜெம் மருத்துவமனையில் கொரோனா பேரிடா் காலத்திலும் 5 குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஆரோக்கியமாக உள்ள நபா் ஒருவா் தனது ரத்த உறவுகளுக்கு கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கலாம். இதனால் தானம் வழங்குபவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றாா்.