November 20, 2021 தண்டோரா குழு
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தின் கோவை மாவட்ட ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமை வகித்தார். கூட்டத்தில், 2022-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக ஜேம்ஸ், பொதுச்செயலாளராக பிரதாப்சேகர், பொருளாளராக லீலா கிருஷ்ணன் உட்பட 71 பேர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மூலப் பொருள்களின் விலையேற்றத்தால் குறுந்தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடும் நெருக்கடியில் உள்ள தொழில்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு ரூ.2 லட்சம், மாநில அரசு ரூ.1 லட்சம் 50 சதவீதம் மானியத்துடன் வட்டியில்லா கடனாக வழங்க வேண்டும்.
குறு, சிறு தொழில் முனைவோர் நலன் கருதி தமிழக அரசு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். வாரியத்தில் குறு, சிறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளைப் பங்கேற்க செய்ய வேண்டும். தமிழக முதல்வர் குறு, சிறு தொழில் முனைவோர்கள் சங்க நிர்வாகிகளை சந்திக்க வாய்ப்பு அளித்து, நேரடியாக பிரச்சினைகளை கேட்டு அறிந்து உதவிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் மூலப் பொருட்களின் விலை உயர்வு கண்டித்து நடத்த உள்ள போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க வேண்டும். கோவையில் அரசுக்கு சொந்தமான இடங்களை தேர்வு செய்து, மாவட்டங்களில் அதிக அளவில் குறுந்தொழில்பேட்டைகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.