November 20, 2021 தண்டோரா குழு
சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த சமூக செயல்பாட்டில் சிறந்து பணியாற்றும் ஆசிரியர்,மாணவர்,அறிவியலாளர் என பல்வேறு துறையினர் நேச்சர் சயின்ஸ் பவுண்டேஷன் சார்பாக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
கோவையை தலைமையிடமாக கொண்டு கடந்த நான்கு வருடங்களாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மரங்கள் நடுவது, குளங்கள் தூர் வாருவது போன்ற இயற்கை சார்ந்த பணிகளை நேச்சர் சயன்ஸ் பவுண்டேஷன் அமைப்பினர் செய்து வருகின்றனர்.
பவுண்டேஷன் தலைவர் ராஜலட்சுமி ஜெயசீலன் தலைமையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து,இளம் தலைமுறை மாணவர்களையும் இணைத்து பசுமை பாதுகாப்பு குறித்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதில் பணியாற்றும் பல்வேறு நிலை சார்ந்த துறையினருக்கு விருதுகள் வழங்கும் விழா கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.நேச்சர் சயின்ஸ் பவுண்டேஷன் தலைவர் ராஜலட்சுமி ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இதில்,செயலாளர் கனகராஜ் மற்றும் இயக்குனர்கள் ஸ்ரீனிவாசன், மேரி ஜோசப்பின்,குமார் ஸ்ரீவத்சவா,வினோத் குமார்,வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக,டாக்டர் சி.வி.ராமன் பல்கலைகழக துணை வேந்தர் டாக்டர் ரவி பிரகாஷ் துபே,காருண்யா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் மன்னர் ஜவஹர், மெட்ராஸ் பல்கலைகழக பதிவாளர் முனைவர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில் காரமடை பகுதியை சேர்ந்த பழங்குடி இன பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக சிறந்த சேவையாற்றியவர்களை கவுரிவிக்கும் விதமாக சிறந்த தலைமை பண்பு,சிறந்த ஆசிரியர்,அறிவியாளர், கல்லூரி, பள்ளி,இளம் அறிவியாளர் என 21 விருதுகள் விருதுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் நேச்சர் சயின்ஸ் பவுண்டேஷன் பல்வேறு நிலை நிர்வாகிகள் விஜயலட்சுமி, பிரியா ராதாகிருஷ்ணன், பிரியதர்சினி, சௌந்தர்யா, சுதாகரன், துஷார் குலாட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.