November 20, 2021 தண்டோரா குழு
கோவை மாநகர காவல் ஆணையராக பதவி வகித்து வந்த தீபக் தமோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து புதிய ஆணையராக நியமிக்கப்பட்ட பிரதீப்குமார் கோவை மாநகர காவல் ஆணையராக இன்று பதவியேற்று கொண்டார்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
தமிழகத்தில் சென்னையை அடுத்து கோவை மிக முக்கிய மாநகரம் என்றும் எனவே இங்கு சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். நகரம் அமைதியாக இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு வித்தியாசமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியதுடன் பெண்கள் குழந்தைகள் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றத்திலிருந்து அவர்களை பாதுகாக்க சரியான விசாரணை நடத்தி நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
சாலை விபத்தை குறைக்க வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் எனது நேரடி கண்காணிப்பு இருக்கும் எனவும் கூறிய அவர்,சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடரும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை குறைப்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்,பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அனைத்து தரப்பினரையும்(மாணவர் பெற்றோர் ஆசிரியர் ஆகியோரை) ஒன்றிணைத்து அனைவரது ஒத்துழைப்புடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் பிரதீப்குமார் குறிப்பிட்டார்.