November 22, 2021 தண்டோரா குழு
கோவையில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ளும் அரசு விழாவில் கோவை மாவட்ட அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க., வை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.,க்களுக்கு முன் வரிசையில் சீட் வழங்கப்பட்டுள்ளது.
கோவை வ.உ.சி மைதானத்தில் வைத்து பல்வேறு நலத்திட்டங்களையும், முடிவுற்ற பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.இதற்காக கோவை உட்பட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்களை தி.மு.க.,வினர் குவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வ.உ.சி மைதானத்தில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர்.
இந்த அரசு விழாவில் கலந்து கொள்ள கோவை மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில், கோவையில் உள்ள 10 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை.9 தொகுதிகளில் அதிமுக.,வும் ஒரு தொகுதியில் பா.ஜ.க.,வும் வெற்றி பெற்றுள்ள சூழலில், அந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில், முன்னாள் அமைசரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.,வுமான எஸ்.பி. வேலுமணி உட்பட அதிமுக.,வை சேர்ந்த 9 எம்.எல்.ஏக்களுக்கும், பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கும் முன் வரிசையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.