December 14, 2016
தண்டோரா குழு
சென்னையில் வர்தா புயல் காரணமாக தேங்கிய குப்பைகளை அகற்ற 1,300 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நோய் பரவாமல் தடுக்க மருத்துவகுழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
இது குறித்து சுகாதாரம் அமைச்சகம் அதிகாரி ஒருவர் தெரிவித்தாவது;
வார்தா புயல் காரணமாக சென்னை நகரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு வெளி மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் 1,300 துப்புரவு பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், 500 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட உள்ளனர். சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 119 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவசர தேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட நடமாடும் மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நிவாரண முகாம்களில் மருத்துவ உதவி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. உணவு பாதுகாப்பு, குடிநீர் பாதுகாப்பு மற்றும் பூச்சிகளால் ஏற்படும் தொற்று நோய்கள் மற்றும் பாதுகாக்கப்படாத அசுத்த நீரினால் ஏற்படும் தொற்றுநோய்களுக்கென மருத்துவ சிகிக்சை வழங்க தலா 50 குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்றார்.