November 29, 2021 தண்டோரா குழு
வாளையார் ரயில் பாதையில் யானைகள் இறப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் பழைய ரயில் தண்டவாளங்களை பயன்படுத்தும் இரும்பு மூலம் தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை வாளையார் அடுத்த நவக்கரை அருகே ரயில் தண்டவளாத்தை கடக்க முயன்ற 3 யானைகள் ரயில் மோதி உயிரிழந்தது. இது தொடர்பாக, ரயில்வே ஊழியர்கள் இருவர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த விவகாரத்தில் ரயில், குறிப்பிட்ட வேகத்தை விட அதி வேகமாக இயக்கப்பட்டது தான் யானைகளின் இறப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. இதற்கு தேவையான ஆதாரங்களை வனத்துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
அதன்படி, ரயில் வேகம் தொடர்பான அறிக்கையை பெற ஈரோடு ரயில்நிலைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களின் ஒப்புதல் பெற்று யானை இறப்பு ஏற்பட்ட அன்றைய தினம் ரயில் இயக்கப்பட்ட வேகம் கண்டறியப்படும் என தெரிகிறது. தவிர, மதுக்கரை-வாளையார் ரயில் பாதையில் வனத்தை கடந்து செல்லும் வகையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு லைன்-ஏ, லைன்-பி ஆகிய இரண்டு ரயில் பாதைகள் செல்கின்றன.
இப்பகுதியில், வனத்துறை அதிகாரிகள் 9 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், ரயில் மோதி யானைகள் இறக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. தவிர, கேரள ரயில்வே அதிகாரிகள் முறையாக இரவு நேரங்களில் ஆய்வு பணிகளையும், ரோந்து பணிகளையும் மேற்கொள்வதில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறை, ரயில்வே துறை இணைந்து செயல்பட்டால் மட்டுமே யானை உயிரிழப்பு தடுக்க முடியும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவை வனத்துறை உயர் அதிகாரிகள், ரயில்வே துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகின்றனர். அவர்களுக்கு, யானை இறப்பை தடுக்க செய்ய வேண்டிய சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளனர்.
அதன்படி, ரயில்வே நிர்வாகம் பயன்படுத்தி வீணாக உள்ள பழைய ரயில் தண்டவாளங்கள் மூலம் மதுக்கரை, வாளையார் இடையில் உள்ள வனப்பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் தடுப்பு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் யானைகள் தண்டவாளங்களில் வருவது தவிர்க்கப்படும். விபத்துக்களும் ஏற்படும் வாய்ப்பு குறையும் என தமிழக வனத்துறையினர், கேரள ரயில்வே துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
யானைகள் இறப்பை அடுத்து ரயில் பாதையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரள ரயில்வே துறை அதிகாரிகளும் கட்டாயம் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
அவர்களிடம் உள்ள பழைய தண்டவாளங்களை பயன்படுத்தி, வனத்தின் இரண்டு பக்கமும் தடுப்பு அமைக்க வேண்டும் என கூறியுள்ளோம். இந்த முறை கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தி நல்ல பயனை அளித்துள்ளது. எனவே, இதனை இங்கேயும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும், வனப்பகுதியில் கூடுதல் லைட்ஸ் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, மாற்று வழிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில், யானைகள் இறப்பு முழுமையாக தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.