December 1, 2021 தண்டோரா குழு
கோவை போத்தனூர், செட்டிபாளையம், விஜய ஸ்ரீநகர் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக வீடு வீடாக சென்று ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ்ஆய்வின்போது துணை இயக்குநர் அருணா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் பருவ மழையால் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் சென்று துப்புரவுப் பணிகளை ஆய்வு செய்து கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை முற்றிலுமாக அழிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள குடிநீர் தேக்க தொட்டிகள் மற்றும் மேல்நிலை தொட்டிகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
பொது கட்டடங்கள், அலுவலகங்கள், உணவகங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் பொது இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான டயர்,டிரம்கள், தேங்காய் சிரட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சீரப்பாளையம் ரேசன் கடையில் அரிசி, சர்க்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.