December 7, 2021 தண்டோரா குழு
காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதாகவும், நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.
கோவை மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ,.க்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
திமுக ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால் சொன்னதை எதுவும் செய்யாமல் வெறும் விளம்பரத்தை வைத்து ஆட்சி செய்கின்றனர். நாங்கள் ஆளும் கட்சியாக இருந்த போது எந்த கட்டப்பஞ்சாயத்தும் இல்லை. ஆனால் இன்று அப்படி இல்லை. சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் என் மீது பழி போடுகிறார். நாங்கள் ஆட்சியில் இருந்த போதும் பல இயற்கை சீற்றங்கள் வந்தது. அப்போது மக்களை நேரடியாக சந்தித்து களப்பணியாற்றினோம்
இப்போது அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். காவல்துறையை நாங்கள் தொந்தரவு செய்யவில்லை. இன்று தொட்டதற்கெல்லாம் வழக்கு போடுகின்றனர். 10 ஆண்டுகளாக எப்படி இருந்தீர்கள் எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள் அஞ்சமாட்டோம்.
காவல்துறை நடு நிலையோடு நடந்து கொள்ள வேண்டும். அதிகபட்சமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் அவ்வளவு தானே. சட்டம் ஒழுங்கு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக நியாயமாக இருக்கிறோம்.
நாங்கள் கொடுத்த திட்டங்களை திமுக நிறுத்தி வைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். சென்னையில் நாங்கள் தொடங்கிய வேலைகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. முழுமையாக வேலைகள் முடிக்கும் போது தண்ணீர் தேங்காது.
கோவையில் 300 பணிகள் நிறுத்தி வைத்துள்ளனர். நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டம் மூலம் பணிகளை மீண்டும் துவங்க வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.