December 10, 2021 தண்டோரா குழு
இனிவரும் காலங்களில் அரசு அதிகாரிகள் ஒருமையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 71 மாற்று திறனாளிகள் தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்காக பணி நியமன ஆணையை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்காக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாளை முதல் கோவை மாவட்டத்தில் வீடுகள் வாரியாகப் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளதாக தெரிவித்த அவர் கணக்கெடுப்பின் பொழுது மாற்றுத்திறனாளிகள் தங்களின் தேவைகளை தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
விமான நிலைய விரிவாக்கத்திற்க்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களிடம் அவர்களுக்கு தேவையான கோரிக்கைகள் பெறப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசியது குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவினர் அவர்களுடன் பயணித்தவர்களை தக்க வைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் ஒருவருக்குத் தோல்வி பயம் ஏற்படும்போது தான் கோபம் வரும் எனவும் அந்த நிலையில் தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் அவர்கள் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசுவது மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அரசு மதுபானக் கடைகளை பொறுத்தவரை மக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் 134 பணியாளர்கள் தற்போது வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள மின்சார திருத்த மசோதாவிற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் இந்த சட்டம் விவசாயிகளுக்கு ஒரு கேள்விக் குறியான சட்டம் என முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்த அவர் இனி நடக்க இருப்பதை பொறுத்திருந்து காண வேண்டும் என தெரிவித்தார்.