December 11, 2021 தண்டோரா குழு
கோவையில் கஞ்சா வியாபாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2.5 கிலோ கஞ்சா மற்றும் ரூ.98 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை போத்தனூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஈச்சனாரி-செட்டிபாளையம் ரோடு கல்லுக்குழி அருகே நின்றிருந்த வாலிபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட புலியகுளம் எரிமேட்டை சேர்ந்த நவீன்(23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.250 கி.கிராம் கஞ்சா மற்று ரூ.52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், கோவைப்புதூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே சிலர் கஞ்சாவிற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள மரத்தின் அருகே மறைவான பகுதியில் சிலர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா வியாபாரிகள் என்பதும், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா சப்ளை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கஞ்சா வியாபாரிகள் கோவை செட்டி வீதியை சேர்ந்த கார்த்திகேயன்(30), அறிவொளி நகரை சேர்ந்த ரவிச்சந்திரன்(58), செல்வராஜ்(44) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.250 கி.கிராம் மற்றும் ரூ. 46,320, ஒரு ஸ்கூட்டி பறிமுதல் செய்யப்பட்டது.