December 16, 2021 தண்டோரா குழு
கோவை ஹோப் காலேஜ் பகுதியில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீர்செய்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கோவையில் சமீப காலங்களாக பள்ளங்களினால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்புகளை சரி செய்ய போலீசாரே சாலையை சீரமைத்து வருகின்றனர் அதற்காக பொதுமக்களும் போலீசாருக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை அவினாசி சாலை ஹோப் காலேஜ் 4 முனை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அருகே நேற்று இரவு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்வதற்காக சாலையில் குழி தோண்டப்பட்டு அப்படியே மூடி விட்டு சென்று விட்டனர். இதனால் இந்த 4 முனை சந்திப்பில் தோண்டப்பட்ட குழியிலிருந்து ஜல்லி கற்கள் சாலை முழுவதும் சிதறி கிடந்தது.
இந்த நிலை இன்று காலை இந்தச் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. காலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வந்த பீளமேடு போக்குவரத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் சாலையில் சிதறிக் கிடந்த ஜல்லி கற்களால் வாகன ஓட்டிகள் , பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலைக்கு செல்பவர்கள் தடுமாறி செல்வதை பார்த்தார். உடனடியாக அவர் அருகில் இருந்த கடையில் பொருட்களை வாங்கி சாலை முழுவதும் சிதறிக் கிடந்த ஜல்லி கற்களை தூரத்தில் எடுத்து அப்புறப்படுத்தினார்.
போக்குவரத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் இந்த செயலை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இது போன்ற செயலில் ஈடுபடும் போலீசாரை பொதுமக்கள் உதவி செய்ய முன் வருவதோடு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.