December 17, 2016 தண்டோரா குழு
ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ரூ.99க்கு அளவில்லா இலவச அழைப்பு மற்றும் இலவச இணைய வசதிகளை பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான பிறகு பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதைபோல் தற்போது ரிலையன்ஸ் ஜியோவிற்கு கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் பிஎஸ்என்எல் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
அதாவது, பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள், வெறும் 99 ரூபாய் ரீசார்ஜில் அளவில்லா இலவச அழைப்புகளையும், 300 எம்பி டேடாவும் பெறலாம். இதன் கால அளவு 28 நாட்கள் ஆகும்.
மேலும், இந்த சலுகை கொல்கத்தா, மேற்கு வங்கம், பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பிற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு இதே சலுகை ரூ.119 முதல் 149 வரையிலான ரீசார்ஜ்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரூ.1099க்கு 3ஜி அளவிலா இணைய சேவையை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.