December 25, 2021 தண்டோரா குழு
கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கணிணி அறிவியல் ஆசிரியராக விஜய் ஆனந்த் என்பவர் பணியாற்றி வருகிறார்.ஆன்லைன் வகுப்புகளும், வழக்கமான வகுப்புகளும் நடைபெற்று நிலையில்,மாணவிகள் சிலருக்கு ஆசிரியர் விஜய் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆன்லைன் வகுப்புகளின் போது, மாணவிகளுக்கு தனியாக வீடியோ கால் செய்து, டிஷர்ட் அணியுமாறும், வீட்டில் யாரும் இல்லையா எனவும் கூறி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் வகுப்புகளுக்கு வரும் மாணவிகளை தேவையில்லாமல் தொடுவதோடு, பாடங்களை தாண்டி மாணவிகளுக்கு ஸ்நாக்ஸ் வாங்கி தருகிறேன் என்றெல்லாம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவிகள், தலைமையாசிரியரிடம் கடந்த வாரம் புகாரளித்த நிலையில், ஆசிரியர் ஒருவாரத்திற்கும் மேலாக பள்ளிக்கு வருகை தரவில்லை. இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், அதிருப்தி அடைந்த மாணவ மாணவிகள் பள்ளியின் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விஜய் ஆனந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அளித்த அரசு பள்ளி கணிணி ஆசிரியர் விஜய் ஆனந்தை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.