December 17, 2016 தண்டோரா குழு
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்க பருவமழை அக்டோபர் 30ம் தேதி தொடங்கியது. ஆனால் தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. நாடா புயல்கள் காரணமாக சென்னையில் ஓரளவுக்கு மழை பெய்தது. நாடா புயலால் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
இதற்கிடையில், டிசம்பர் 10ம் தேதி வங்கக் கடலில் வலுப்பெற்ற வர்தா புயல் 12ம் தேதி சென்னையை நேரடியாக தாக்கியது. இதில் நிலைகுழைந்து போயுள்ள சென்னை அதிலிருந்து மீண்டு வருவதற்குள் தெற்கு அந்தமான் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த தாழ்வு நிலை புயலாக மாறும் பட்சத்தில் சென்னையை தாக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தெற்கு அந்தமான் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மானாமதுரையில் 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.