December 30, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களில், கொரோனா விதிகளை மீறும் விடுதிகள், உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆங்கில புத்தாண்டையொட்டி, உணவகங்கள், விடுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால், தனியார் விடுதிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதலை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதி மீறும் விடுதிகள் மீது அபராதம் மற்றும் சீல்வைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மாநகரப் பகுதிகளில் 5 மண்டலங்களிலும் கொரோனா வழிகாட்டுதல் முறைகளை மக்கள் பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க மண்டலத்துக்கு ஒரு குழு வீதம், 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர், அந்தந்த பகுதிகளில் உள்ள பொது இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், கடைகள், வணிக நிறுவனங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு விதிமீறுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.