January 3, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பீளமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரYசவத்திற்கு முன்பு, பின்பு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அம்மையத்தில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் குறித்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர் அப்பகுதியில் கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்து குப்பைகளை உடனடியாக அகற்ற பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். அதே போல் காமதேனு நகர் பகுதியிலுள்ள வார்டு அலுவலகம் மற்றும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளுக்கு சென்று பள்ளியின் கழிவறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, கழிவறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.