January 6, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆர்.எஸ்.புரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் டாக்டர்கள் குழு தலைமையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை பலருக்கு ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தேவைப்பட்டது. எனவே பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் எந்தெந்த மையங்களில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள், சாதாரண படுக்கை வசதிகள், ஆம்புலன்ஸ் சேவை தேவைபடுபவர்களுக்கு உடனுக்கு உடன் உதவிடும் வகையில் இந்த மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள், கொரோனா பரிசோதனை முடிவுகள், அருகில் இருக்கும் சிகிச்சை மையம், கொரோனா தடுப்பூசி மையம் உள்ளிட்ட தகவல்களை இந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு போன் செய்து பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.கொரோனா சிகிச்சை மையங்களை கண்காணிக்க இங்கு சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.