January 6, 2022 தண்டோரா குழு
பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பை உதாசீனப்படுத்தியதாக கூறி பஞ்சாப் மாநில அரசை கண்டித்து கோவை மாவட்ட பாஜக சார்பில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஜனவரி 5-ம் தேதி அன்று, பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தபோது, விவசாயிகள் சிலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பிரதமர் வாகனமும், அவரது பாதுகாப்புப் படை வாகனங்களும் சுமார் 20 நிமிடங்கள் ஒரு மேம்பாலத்தின் மீது நிறுத்தி வைக்கப்பட்டன.
பின்னர், பஞ்சாபில் நடக்கவிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, பிரதமர் மோடி அங்கிருந்து மீண்டும் டெல்லி திரும்பினார்.இதையடுத்து, பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காகப் பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை மத்திய உள் துறை அமைச்சகம் கடுமையாகக் கண்டித்தது. இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்பை உதாசீனப்படுத்தியதாக பஞ்சாப் அரசை கண்டித்து பாஜக சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கோவை மாவட்ட பாஜக சார்பில் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக காந்திபுரம், நஞ்சப்பா சாலையில் உள்ள விநாயகர் கோவில் அருகே திரண்ட பாஜக தொண்டர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிரான கோஷங்கள் அடங்கிய பதாகைகளுடன் சிறிது நேரம் சாலையில் நின்றனர்.
இதனிடையே பிரதமர் மோடி பல்லாண்டுகள் வாழ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாவட்டத் தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.