January 10, 2022 தண்டோரா குழு
தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக கோவையை சேர்ந்த நடைபாதை வியாபாரிகள், காய்கறிகள் வாங்க மஞ்சப்பை எடுத்து வருபவர்களுக்கு ரூ.5 தள்ளுபடி என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் நோக்கில், மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அண்மையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நடைபாதை காய்கறிகள் மற்றும் பழங்கடை வியாபாரிகள் சிலர் தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், பொருட்களை வாங்கிச் செல்ல மஞ்சப்பையுடன் வந்தால், அவர்களுக்கு கிலோவுக்கு ரூ.5 தள்ளுப்படி செய்யப்படும் என அறிவித்துள்ளனர். அதன்படி கடைகளுக்கு மஞ்சப்பையுடன் வந்த வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையிலேயே காய்கறிகள், பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து ஆர்.எஸ்.புரம் டி.பி சாலையில் மஞ்சப்பையுடன் வருபவர்களுக்கு தள்ளுபடி பச்சை பட்டாணி விற்பனை செய்துவரும் செல்வராஜ் கூறும் போது :-
கடந்த 30 ஆண்டுகளாக தள்ளுவண்டியில் பச்சைபட்டாணி வியாபாரம் செய்து வருகிறேன், தற்போது பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வலியுறுத்தும் விதமாகவும், மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக தள்ளுபடி விலையை அறிவித்துள்ளோம். இந்த தள்ளுபடி விலை அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மஞ்சப்பையுடன் கடைகளுக்கும் வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முதல் முறை பிளாஸ்டிக் பையுடன் வந்தாலும், அறிவிப்பை பார்த்து மறுமுறை மஞ்சப்பை எடுத்து வரும் வாடிக்கையாளர்களை பார்க்க முடிகிறது. பொதுமக்கள் இணைந்து இந்த விழிப்புணர்வை அனைவரும் மத்தியிலும் கொண்டுச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.