January 10, 2022 தண்டோரா குழு
கோவை பூ மார்க்கெட் தெப்பக்குளம் பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதனை ஆட்சியர் சமீரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டத்தில் உள்ள 1428 ரேசன் கடைகளின் மூலம் 10 லட்சத்து 78 ஆயிரத்து 484 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், புளி, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, துணிப்பை ஆகிய 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதனைத்தொடர்ந்து பூ மார்க்கெட் தெப்பக்குளம் பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமானதாகவும், சரியான எடையிலும் உள்ளனவா? அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கு நின்றியிருந்த பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பொங்கல் பரிசு பொருட்களை பெற்றுச் சென்றனர். இவ்ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமாரி, உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.