January 11, 2022 தண்டோரா குழு
தொண்டாமுத்தூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ஆலாந்துறை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் இருபிரிவினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதனிடையே கடந்த சனிக்கிழமை பள்ளிக்கு வெளியே அந்த மாணவர்களின் இருபிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவரிடம் இதுதொடர்பாக தெரிவித்துள்ளனர்.அந்த முன்னாள் மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கி தன் பையில் மறைத்து வைத்திருத்த கத்தியை வைத்து சரமாறியாக தாக்கி உள்ளார். இதில் மூன்று மாணவர்களுக்கு கத்தி குத்து ஏற்பட்டது.
இதில் ஒரு மாணவருக்கு மட்டும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அந்த மூன்று பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆலந்துறை போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து 3 பேரை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.இதனிடையே தலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை அடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்கு சென்று படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய வயதில் கோஷ்டி மோதல் என்ற பெயரில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.