January 12, 2022 தண்டோரா குழு
கோவையில் இருந்து வாளையாறு வழியாக கேரளாவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கேரள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் தமிழக கேரள எல்லையான வாளையாறு சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அவர்கள் ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி முழுவதுமாக சோதனை செய்தனர்.
அப்போது கோவையில் இருந்து ஆழப்புழா நோக்கி சென்ற பேருந்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் சுங்கதுறை அதிகாரிகள் பேருந்தில் ஏறி ஒவ்வாரு பயணிகளின் உடமைகளையும் கவனமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது பேருந்தில் இருந்த ஒரு பையில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொருட்கள் இருந்தன.
இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறையினர் அதனை தனியாக எடுத்து சோதனை செய்தனர். அப்போது அது அதிக போதை தரும் ஹாசிஸ் ஆயில் எனப்படும் ஒரு வகை போதைப்பொருள் என தெரியவந்தது. மொத்தம் 11 கிலோ போதைப்பொருள் அந்த பையில் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.3 கோடியாகும்.
இதுதொடர்பாக குமரி மாவட்டத்தை சேர்ந்த பிரமோத் என்பவரை பிடித்து சுங்கத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.