January 18, 2022 தண்டோரா குழு
73-வது குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்மெனிஸ் தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 மத்திய ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. டெல்லி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
குடியரசுதினத்தையொட்டி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. குடியரசு தின அணிவகுப்பில் ரபேல் உள்பட 75 விமானங்கள் பங்கேற்கிறது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் குடியரசு தின விழாவில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
இதுதொடர்பாக மத்திய உளவுத்துறை 9 பக்க அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் பிரதமர் மோடி மற்றும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.பிரதமர் மோடி மற்றும் பிற தலைவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் குடியரசு தினத்தன்று தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளனர் என்று அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தை சேர்ந்த குழுக்களிடம் இருந்து இந்த அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயர் பதவியில் இருக்கும் பிரமுகர்களை குறி வைத்தும், பொதுக்கூட்டங்கள், முக்கிய நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் நெரிசலான இடங்களையும் இலக்காக வைத்து உள்ளனர்.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் எதிர்ப்பு குழுக்கள் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் உளவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தானை மையமாக கொண்ட காலிஸ்தானி குழுக்கள் பஞ்சாபில் மீண்டும் தீவிரவாதத்தை ஒருங்கிணைக்கவும், புத்துயிர் பெறவும் பணியாளர்களை அணிதிரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களை இலக்கு வைத்து இந்த குழுக்கள் தாக்குதலில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காலிஸ்தானி தீவிரவாத குழுக்கள் பிரதமரின் பொதுக்கூட்டம் மற்றும் செல்லும் இடங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தகவலும் உளவுத்துறைக்கு கிடைத்து இருந்தது.குடியரசு தின விழாவில் பிரதமரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. குடியரசு தின விழாவில் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.