January 19, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கருவூல மையத்தின் பாதுகாப்பு அறைக்கு அருகில் பாம்பின் தோல்கள் கிடந்துள்ளன. இதனை கண்ட மைய பணியாளர்கள் அலுவலக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அதிகாரிகள் மீட்பு பணி துறையினருக்கு தகவல் தெரிவித்து அங்கு வந்த மீட்பு பணி துறையினர் பாம்பை தேடும் முயற்சியில் ஈடுப்பட்டனர். ஆனால் பாம்பு தென்படாததால் அவர்கள் திரும்பி சென்றனர்.அந்த அலுவலகம் நீண்ட நாட்களாக தூசடைந்து காணப்படுவதால் இது போன்ற உயிரிகள் வரக்கூடும் என்றும் எனவே அறையை தூய்மை செய்யும் படியும் மீட்பு பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல மக்கள் வந்து செல்லும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு சட்டை கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பாதுகாப்பு அறையில் 24 மணி நேரமும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுவதால் அவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட கூடும்.மேலும் கிடைத்த பாம்பின் தோல் நல்ல பாம்பின் தோல்கள் என மீட்பு பணி துறையினர் தெரிவித்தனர்.