January 20, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக்கும் திட்டத்தின் கீழ் அரசு மானியத்துடன் அக்ரி கிளினிக் மற்றும் வேளாண் சார்ந்த வணிக தொழில் ஆரம்பிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக கோவை மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 12 வட்டாரங்களில் 37 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் வேளாண் கருவிகள் வாடகை மையம், காய்கறிகள் பழங்களை கொள்முதல் மற்றும் விற்பளை செய்தல், மண், தண்ணீர் பரிசோதனை மையம் போன்றவைகளை துவங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்.
21 முதல் 40 வயதிற்குட்பட்ட வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை பட்டபடிப்பு முடித்து அரசு அல்லது தனியார் துறைகளில் வேலைகளில் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.இதற்கு விண்ணப்பத்துடன் பத்தாம் அல்லது பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,
பட்டப் படிப்பு சான்றிதழ், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு விபரம், வங்கி மூலம் கடன் பெறுபவர்கள் அவ்வங்கியின் கடன் ஒப்புதல் அறிக்கை, இதற்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.2 லட்சம் வரை சமர்ப்பிக்கலாம்.
இதில் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். மாவட்ட கலெக்டர் தலைமையிலான மாவட்ட தேர்வு குழு மூலம் தொழில் முனைவோர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விபரங்களுக்கு வேளாண் இணை இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.