January 21, 2022 தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் நிறைய இடம் பெண்கள் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றுள்ளனர் எனவும் தொடர்ந்து கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை செட்டிபாளையம் பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்த இந்த போட்டியில் களம் இறக்கப்பட்ட 873 காளைகளை 400 மாடுபிடிவீரர்கள் கலந்து கொண்டு களமாடினர்.
கொரனோ விதிமுறைகளை பின்பற்றி நடந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்கள் அனுமதியில்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாடுகளுக்கு அண்டா மற்றும் ஹாட் பாக்ஸ் பரிசாக வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்கக் காசுகள்,LED TV, பீரோ,சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.குறிப்பாக இந்தபோட்டியில் பங்கேற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயா இரண்டு மாடுகளை இறக்கி இரண்டுக்கும் தங்க நாணயங களை வென்றார். இதேபோன்று அவனியாபுரத்தில் ஆறுதல் பரிசு பெற மறுத்த யோகதர்சியின் காளை வெற்றி பெற்று தங்கநாணயம் மற்றும் அண்ட்,கிப்ட் பாக்ஸ் ஆகியவற்றை பரிசாக பெற்றார்.
இதேபோன்று கோவை காரமடையைச்சேர்ந்த கிருத்திகா உள்பட மகளிர் பலர் இந்த ஜல்லிகட்டில் தங்களது காளைகளை களமிறக்கினர்.இந்த போட்டியில் அதிகபட்சமாக 21 காளைகளை அடக்கிய மதுரை மாவட்டம் குருவித்துறையைச்சேர்ந்த மணி என்ற அபினந்த் 21 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச்சென்றார்.மதுரைச்சேர்ந்த பொதும்பு பிரபா 19 காளைகளை அடக்கி இரண்டாவது பரிசாக யமஹா எப்.இசட் இருசக்கர வாகனத்தையும், மூன்றாவது இடம் பிடித்த நத்தம் கார்த்திக் 18 காளைகளை அடக்கி எக்ஸ்.எல் சூப்பர் இருசக்கர வாகனத்தையும் பரசாக பெற்றனர்.
இதேபோன்று கட்டிக்குடிபட்டியை சேர்ந்த சுப்ரமணியம் என்பவரது காளை சிறந்த காளை தேர்வு செய்யபட்டு கன்றுகுட்டியுடன் மாடு பரிசாக வழங்கபட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி,
இந்தத் போட்டிக்கு வந்த 1750 காளைகளில் நேரமின்மை காரணமாக மீதமுள்ள காளைகள் களமிறக்க முடியவில்லை எனவும், இருந்தாலும் அனைத்து காளைகளுக்கு பரிசு வழங்கப்படும் எனவும் இந்த போட்டியில் இளம் பெண்கள், மகளிர் அதிக அளவில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளனர் எனவும் கோவையில் தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாடுபிடி வீரர் அபிநாத் என்ற மணி கூறுகையில்;-
தான் கடந்த ஆண்டு 12 மாடுகளை பிடித்ததாகவும், இந்த ஆண்டு 21 மாடுகளை பிடித்து முதல் பரிசை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தவர், பிஏ ஆங்கிலம் பயின்றுள்ளேன், தற்போது விவசாயம் செய்து வருகின்றேன். அரசு வேலைவாய்ப்புகள் அளித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
2 ம் பரிசான ஹெமெகா பைக் பரிசு பெற்ற மதுரையை சேர்ந்த மாடுபிடி வீரர் பிரபாகரன் கூறுகையில்;-
பாலமேட்டு ஜல்லிகட்டில் தான் தொடர்ந்து முதலிடம் பிடித்ததாகவும், தற்போது கோவையில் 2 பிடித்து பரிசுகளை பெற்றதாக கூறினார்.
18 காளைகளை அடக்கி 3 ம் பரிசான டிவிஎஸ் 100 இருசக்கர வாகனத்தை பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் கூறும்போது,
கடந்த ஆண்டு கோவையில் அதிமுக ஆட்சியில், 3 ம் இடத்தில் வெற்றி பெற்றும், பைக் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியவர், இந்த ஆண்டு கோவையில் சிறப்பான ஜல்லிகட்டை பார்க்க முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது காளை முதலிடத்தை பிடித்தது, அதன் உரிமையாளருக்கு கன்று குட்டி பரிசளிக்கப்பட்டது. 2ம் பரிசு பெற்ற காளைக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது.