January 22, 2022 தண்டோரா குழு
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள பாழடைந்த குடோனில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்க 5ம் நாளாக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இதில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.
கோவை மதுக்கரை, சுகுணாபுரம், கோலமாவு மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்று வயதான ஆண் சிறுத்தை கடந்த 17-ம் தேதி குனியமுத்தூர் அடுத்த பி.கே புதூரில் உள்ள பாழடைந்த குடோனில் பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து,அந்த குடோனை வனத்துறையினர் வலை கொண்டு மூடினர். குடோனின் இருவாயில்களிலும் கூண்டுகள் வைத்து கூண்டுகளில் இறைச்சி மற்றும் நாய்களை கட்டி வைத்து அதனைபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், 6 கேமராக்கள் மூலம் சிறுத்தையின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தொடர்ந்து 5வது நாளாக நேற்றும் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இதில்,சிறுத்தை குடோனுக்குள் உலா வருவதும், கேமராவை உற்று பார்த்துவிட்டு,கூண்டின் அருகே சென்று விட்டு திரும்பியதும் தெரியவந்தது.இதனிடையே கடந்த 5 நாட்களாக இரவு பகலாக வனத்துறையினர் கூண்டு வைத்து காத்திருந்த நிலையில் சிறுத்தை கூண்டுக்குள் அகப்பட்டது.