January 24, 2022 தண்டோரா குழு
கோவையில் கிறிஸ்தவ தேவாலயத்தில் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்திய விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் வலியுறுத்தியுள்ளர்.
கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே டிர்னிட்டி கிறிஸ்தவ தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தின் நுழைவு வாயில் அருகே, செபஸ்தியர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஞாயிறன்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் தேவாலயத்தின் நுழைவாயில் இருந்த சிலையை உடைத்து சேதப்படுத்தி தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
செபஸ்தியார் சிலையை திட்டமிட்டு சேதப்படுத்திய சம்பவம் பலவேறு தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கோவையில் எப்படியேனும் மத துவேசத்தை விசிரிவிட்டு ஆதாயம் தேடும் முயற்சியில் ஒரு கும்பல் களமிரங்கியுள்ளது தெளிவாக தெரியவருகிறது. ஏற்கனவே வெள்ளளூரில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தி இந்துத்துவ அடிப்படைவத கும்பல் பதட்டத்தை உருவாக்கியது.
காவல்துறை துரித நடவடிக்கையின் காரணமாக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது செபஸ்தியார் சிலை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக தீவிர விசாரணை மேற்கொண்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். அதேநேரத்தில் விஷமிகளின் இதுபோன்ற திசை திருப்பல் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒருபோதும் இரையக வேண்டாம் என்றும் இத்தகைய சமூக விரோதிகளை தனிமைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.