January 25, 2022 தண்டோரா குழு
குடியரசு தினத்தினை முன்னிட்டு நாளை கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் காலை 08.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார்.
அதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், மருத்துவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை தொடர்புடைய துறை தலைமை அலுவலர்களிடம் வழங்கி ஆட்சியர் சிறப்பிக்க உள்ளார்.
கொரோனா தொற்றால் நிலவும் சூழ்நிலையினை கருத்தில் கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை கௌரவிக்கும் பொருட்டு அவரவர் வீட்டிலேயே சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள். இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் கோவை மாவட்ட ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. எனவே குடியரசு தின விழா நிகழ்ச்சியினை பொதுமக்கள் வீட்டிலிருந்தே காணலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சபை கூட்டம் ரத்து
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலை காரணமாக குடியரசு தினம் அன்று கிராமங்களில் வழக்கமாக நடைபெறும் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் 227 ஊராட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.