January 25, 2022 தண்டோரா குழு
அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ஒரு ஆண்டுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடன்களை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்க ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்ட் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாக்ட் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:
நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், தொழில் துறையினர் வாங்கும் மூலப்பொருட்களின் விலை 100 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முழுமையாக முடங்கிய நிலையில் உள்ளன.
தொழில் முடக்கத்தால் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். பல தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடும் நடவடிக்கைகள் எடுத்து கடன் பெற்றவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தேசிய வங்கிகள் தொழில் துறை சார்ந்தவர்கள் மீது ஜப்தி மற்றும் ஏல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கிகள் இவ்வாறு அளித்து வரும் நெருக்கடிகளைத் தடுக்க வேண்டும்.
மேலும், அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ஒரு ஆண்டுக்கு கடன்களை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தொற்று துவங்கிய 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கி, கடன் தொகையை திருப்பி செலுத்த அளிக்கப்படும் கால அவகாசம் முழுமைக்கும் அபராத வட்டி அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள குறுந்தொழில் முனைவோருக்கு உடனடியாக குறைந்த வட்டியில் திருப்பி செலுத்த கால அவகாசத்துடன் புதிய கடன் திட்டத்தை அறிவித்து, அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபில் மதிப்பெண் பார்க்காமல் வழங்கிட வேண்டும்.
கடனை திருப்பி செலுத்த தொழில் முனைவோர் மீது வங்கிகள் உட்பட அனைத்து நிதி நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 2022-ம் ஆண்டுக்கு பிறகு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.