January 26, 2022 தண்டோரா குழு
கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவன், 200 சங்க இலக்கிய தமிழ் சொற்களின் பொருள் மற்றும் எதிர் சொற்களை வேகமாக கூறி சாதனை புரிந்துள்ளார்.
கோவை, செட்டி வீதி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர், சங்கீதா தம்பதியர். இவர்களின் இளைய மகன் பிரித்திவ். பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், சிறு வயது முதலே தமிழ் எழுத்துக்களை தலைகீழாக எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்நிலையில் இவரது அரிய திறமையைக் கண்ட இவரது பெற்றோர், மாணவன் பிரித்திவுக்கு அளித்த பிரத்யேக பயிற்சியால், பல்வேறு சாதனைகளை இவர் செய்து அசத்தியுள்ளார்.இந்நிலையில் மீண்டும் புதிய சாதனையாக 200 சங்க இலக்கிய தமிழ் சொற்களின் எதிர் சொல் மற்றும் அதன் பொருளை வேகமாக கூறி சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து மாணவரின் தாயார் சங்கீதா கூறுகையில்,
பிரித்திவ் இரு கைகளால் எழுதுவது ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களை தலை கீழாக எழுதுவது என பல்வேறு சாதனைகளை செய்த நிலையில், தற்போது குடியரசு தினத்தில் இந்த சாதனையை செய்வதற்காக கடுமையாக பயிற்சி செய்து இந்த சாதனையை செய்துள்ளதாக தெரிவித்தார்.
மாணவன் பிரித்திவின் சாதனையை கண்காணித்த நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தின் கலை பண்பாட்டு துறை தீர்ப்பாளர் சிவ முருகன் மாணவனுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.