January 29, 2022 தண்டோரா குழு
கோவையில் ஸ்வீட் கடையில் பணிக்கு அமர்த்தப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை தெலுங்குபாளையம் ராஜேஷ்வரி நகரில் உள்ள கவின் மற்றும் எம்.கே ஸ்வீட் கடையில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதாக தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்ட அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரி பீஜூ அலெக்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தபட்ட கடையில் சோதனை செய்தனர்.அப்போது, 9 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் 2 பேரை ஸ்வீட் கடையில் பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது.
இது தொடர்பாக செல்வபுரம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சிறுவர்களை பணிக்கு அமர்த்திய ஸ்வீட் கடை உரிமையாளர்கள் செல்வபுரம் தெலுங்கு பாளையத்தை சேர்ந்த தவசியப்பன் அடைக்கலம் (31), செல்வபுரம் சொக்கம்புதூரை சேர்ந்த கண்ணன் (41) ஆகிய இருவர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் குழந்தை தொழிலாளர்கள் 2 பேரும் மீட்கப்பட்டனர்.