February 2, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) தலைவர் ரமேஷ் பாபு கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் பட்ஜெட்டை கொடிசியா வரவேற்கிறது. இந்த ஆண்டு வரவு-செலவு திட்டம் உற்பத்தி, பருவ நிலை மாற்றம் குறித்த செயல்பாடுகள், நிதி முதலீடுகள் மற்றும் பிரதமரின் ‘கதி சக்தி’ திட்டம் என்ற 4 முக்கிய இலக்குகளை கொண்டிருக்கிறது. இது ஒரு சமநிலை வரவு செலவு திட்டமாக உள்ளது.
அவசர கால கடன் உறுதி திட்டத்தை மார்ச் 2023 வரை நீட்டித்து ரூ.50,000 கோடி என்று இருந்த உறுதி திட்ட வரம்பு ரூ. 5 லட்சம் கோடியாக உயர்த்தியது, மேக் இன் இந்தியா திட்டத்துக்கு முன்னுரிமை தருவதாக ஆயுத இறக்குமதி குறையும். டிரோன் சக்தி திட்டம் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பயன்பெறும்.
ஆனாலும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வருமான வரியையும், பெரு நிறுவனங்கள் வருமான வரி விகிதத்தை போல கணக்கிடுவது உள்ளிட்ட விஷயங்களை மத்திய அரசு கவனத்தில் எடுக்காதது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) தலைவர் ரவி சாம் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் தனித்துவமான வரி விதிப்பு திட்டங்களால் விவசாயத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தொழிலாக இந்திய ஜவுளி தொழில் உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,40,986 கோடியாக அதிகரித்து இருப்பது பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியாகும். 2021-22, 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கான பருத்தியை குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொள்முதல் செய்ய இந்திய பருத்தி கழகத்திற்கு ரூ. 17,683 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது, கடந்த 2 ஆண்டுகளில் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 2 கோடி பருத்தி பேல்களால், இந்திய பருத்தி கழகத்திற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட உதவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் பாலசுப்ரமணியன் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக சில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பன்முக மாதிரி சரக்கு போக்குவரத்து பூங்காக்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. தொழில் நகரமான கோவையின் நீண்ட கால எதிர்பார்ப்புகளில் இதுவும் ஒன்றாகும். நகர்புற திட்டமிடல் மற்றும் கட்டமைப்பு வசதிக்கு கூடுதல் நிதி ஒதுக்கி திட்டமிடப்பட்டுள்ளது. இதன் உருவாக்கத்தில் உள்ள கோவை மாஸ்டர் பிளான் திட்டம் பயன்பெறும் வாய்ப்பு உள்ளது. சாலை போக்குவரத்து, மெட்ரோ ரயில் திட்டங்களை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மெட்ரோ ரயில் கோரிக்கையை முன் வைத்துள்ள நிலையில் இதன் மூலமாக கோவை பயன்பெற வாய்ப்புள்ளது. வைரத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. நகை உற்பத்தி மையமான கோவைக்கு இதன் மூலமாக பயன் கிடைக்கும். பாதுகாப்பு துறைக்கான தளவாடங்களில் 68 சதவீதம் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்துறையில் வளர்ந்து வரும் கோவையானது இதன் மூலமாக பயன்பெற வாய்ப்புள்ளது.
ஸ்டீல் விலை உயர்வால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை கவனத்தில் கொண்டு இதற்கான இறக்குமதி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை தவிர, பொதுவாக பல்வேறு வரவேற்புக்குரிய அறிவிப்புகள் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் கார்த்திக் கூறியிருப்பதாவது:
மாநிலங்களுக்கு கடன் அளித்து உதவ ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. இதன் மூலமாக மாநிலங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை கொண்டு வர முடியும். வேளாண் துறை மற்றும் ஊரக தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஊரக பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
பிரதம மந்திரியின் கதி சக்தி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 100 சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும் என்பதும், 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கான தேசிய நெடுஞ்சாலை பணிகளை 2022 – 2023-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதும், அவசர கால கடன் திட்டம் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதும், இதன் அளவை ரூ.5 லட்சம் கோடியாக அதிகரிக்க செய்துள்ளதும் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், அவசர கால கடன் திட்டத்தின் அளவை 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தாதது ஏமாற்றமளிப்பதாாக உள்ளது. இது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதிக்க செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறியிருப்பதாவது:
தொழில் முனைவோருக்கு அவசர கால கடன் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடன் ரூ.50 ஆயிரம் கோடி அதிகரிக்கப்பட்டு, மொத்தமாக ரூ.5 லட்சம் கோடியாக 2023-ம் ஆண்டுக்குள் வழங்கப்படும், பாதுகாப்பு துறைக்கான தளவாடங்களில் 68 சதவீதம் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அதனை குறைப்பதற்கான எவ்வித புதிய அறிவிப்புகள் இல்லை. வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுதல், வங்கி கடன்களை திருப்பி செலுத்துவதற்கான கால நீட்டிப்பு, தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லாதது போன்றவை கொரோனா தொற்றின் தாக்கத்தால் நலிவடைந்துள்ள தொழில் முனைவோர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் (டாக்ட்) மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:
குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு, ராணுவ தளவாட உற்பத்தியில் 68 சதவீதம் உள்நாட்டில் கொள்முதல், அரசு நிறுவனங்கள் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 7 நாட்களுக்குள் முழுத்தொகையை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில அறிவிப்புகள் வரவேற்புக்குரியது.
ஆனால், சிறு, குறு தொழில்களை நடைமுறை சிக்கல்களில் இருந்து பாதுகாக்க எவ்வித அறிவிப்பும் இல்லை, மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் முடங்கிக் கிடக்கும் குறு, சிறு தொழில்களுக்கு உதவிட முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மீது அறிவிப்புகள் இல்லாதது பெரும் ஏமாற்றம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு தலைவர் பிரபு தாமோதரன் கூறியிருப்பதாவது:
புதிதாக ஆரம்பிக்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கான ஊக்கச்சலுகையை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்திருப்பது புது முதலீடுகளை ஊக்கப்படுத்தும். தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்தி விவசாய விளை பொருட்களின் விளைச்சலை அதிகரிக்கும் முயற்சிக்கான அறிவிப்பு வரவேற்கத்தக்கது. வியாபாரம் செய்வதை சுலாபமாக்குவது தொடர்பான அடுத்த கட்ட திட்டங்களை தயாரிப்பது என்ற முடிவு தொழில் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) தலைவர் கோவை கிளை அர்ஜூன் பிரகாஷ் கூறுகையில்,
‘‘ மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையானது தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சிக்கானது. 5ஜி, டிஜிட்டல் கரன்சி, ட்ரோன் தொழில்நுட்பம், பாரத் நெட் திட்டம், எலக்ட்ரானிக்ஸ் துறை மேம்பாடு என பல்வேறு வரவேற்புக்குரிய அறிவிப்புகள் உள்ளன,’’ என்றார்.
கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறுகையில்,
‘‘ சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு உதவ ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு மற்றும் திறன் மேம்பாட்டு புத்துணர்வு பயிற்சிகள் இணையம் வழியாக வழங்கப்படும், தொழில் தொடங்குவதை எளிதாக்க ஒற்றைச்சாளர முறை, புதிய தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும் வரி விலக்கு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம். அதேநேரத்தில், மூலப்பொருட்கள் விலை உயர்வைக் குறைக்க எடுக்கப்படும் உடனடி நடவடிக்கைகள் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாதது எங்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பாதிப்பில் உள்ள நிலையில், வங்கிக் கடன்களில் வட்டி மானியம், வட்டி குறைப்பு நடவடிக்கைகள் இல்லை,’’ என்றார்.
தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்க (டான்ஸ்டியா) துணைத் தலைவர் சுருளிவேல் கூறுகையில்,
‘‘ நிதி நிலை அறிக்கையில் 100 சரக்கு முனையங்கள், 400 புதிய வந்தே பாரத் ரயில்கள், உள்ளூர் வணிக மேம்பாட்டுக்கு ஒரு ரயில் நிலையம் ஒரு உற்பத்தி பொருள் திட்டம், நதிகள் இணைப்பு திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சீரமைப்பு, மின்சார வாகனங்கள் உற்பத்தி ஊக்குவிப்பு, குறு மற்றும் சிறு நிறுவனங்கள் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு, 68 சதவீத ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டில் உற்பத்தி, அவசர கால கடன் திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. மேலும், ஐாப் ஒர்க் நிறுவனங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி அளிக்கப்படவில்லை என்பதும், குறுந்தொழில்களுக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்க பல ஆண்டுகளாக கேட்டும் அதனை செயல்படுத்த வில்லை, தனிநபர் வருமான வரி எந்த வித மாற்றமும் இல்லாமல் இருப்பது போன்ற அம்சங்கள் ஏமாற்றமளிக்கிறது,’’ என்றார்.
கோவை மாவட்ட சாலையோரம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் மணி கூறுகையில், ‘‘
கொரோனா ஊரடங்கால் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்தது. கடந்த பட்ஜெட்டில் ரூ.10 ஆயிரம் கடன் உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால் அது சிலருக்கு மட்டுமே கிடைத்தது. இந்த பட்ஜெட்டில் சாலையோர வியாபாரிகளுக்கு அந்த ரூ.10 ஆயிரம் கடன் குறித்த அறிவிப்புக்கூட இல்லை. சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக எந்த அறிவிப்பும் இல்லை. இது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது,’’ என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறுகையில்,
‘‘ தேசிய நதிகள் இணைப்பு குறித்து மத்திய பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. தென்னக நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்கவில்லை. தேசிய வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி குறித்தும் புதிய விவசாய வளர்ச்சிக்கு வங்கி கடன் குறித்தும் அறிவிப்பு இல்லை. விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இல்லை. விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது,’’ என்றார்.