February 3, 2022 தண்டோரா குழு
அதிமுக சார்பில் கோவையில் 38வது வார்டில் போட்டியிடும் ஷர்மிளா சந்திரசேகர் இன்று கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மனு தாக்கல் செய்தார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ள சூழலில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில்,அதிமுக கோவை மாநகர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் இணை செயலாளர் ஷர்மிளா சந்திரசேகர் கோவை மாநகராட்சி 38வது போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இன்று மதியம் கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அம்மா நல்லாசியுடன், இ.பி.எஸ்., ஓபிஎஸ்., மற்றும் எஸ்.பி வேலுமணி அவர்களின் ஆசிகளுடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். கோவை அதிமுக.,வி எஃகு கோட்டையாக உள்ளது. 38 வது வார்டில் அதிமுல அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.எனது வார்டில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். நான் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். 6 ஆண்டுகளாக உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளேன்.
10 ஆண்டுகளாக பொதுவாழ்வில் உள்ளேன். நாங்கள் அறக்கட்டளை நடத்தி வருகிறோம். பெண்களை மனதில் வைத்து பல நத்திட்டங்கள் செய்துள்ளோம். பள்ளி மாணவிகளுக்கும் சில திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம். இது எனது முதல் தேர்தல் இது. எங்கள் வார்டில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும், பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இளைஞர்களுக்கு தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும். மேயர் பதவி என்பது கட்சி தலைமை முடிவு செய்ய வேண்டியது.இவ்வாறு அவர் கூறினார்.
மனு அளிக்கும் போது புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்திரசேகர் உடனிருந்தார்.