February 5, 2022 தண்டோரா குழு
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 6000 ஊழியர்களுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பபடிவம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது,
கோவை மாநகராட்சி தேர்தலில் 6 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதையடுத்து அவர்களுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பபடிவம் வழங்கப்பட்டது.கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக 1,500 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இவர்கள் 200 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு தபால் ஓட்டு விண்ணப்பம் வழங்கப்பட்டது.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அதற்கான உத்தரவு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டனர். இவர்கள் அனைவரும் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அங்கிருந்த அட்டை பெட்டியில் போட்டனர்.இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்களுக்கு உரிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டதும், வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தேர்தல் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்படும்.
இந்த தபால் ஓட்டை பெற்றுக்கொண்ட தேர்தல் ஊழியர்கள் தாங்கள் விரும்பும் வாக்காளர்களுக்கு வாக்கை செலுத்தலாம். மேலும் இந்த தபால் ஓட்டை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22-ந் தேதி காலை வரை செலுத்த முடியும் என்றார்.