February 8, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி 38 வது வார்டில் அதிமுக வேட்பாளராக டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் போட்டியிடுகிறார்.இவர் கடந்த சில நாட்களாக தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஓணாப்பாளையம், பொம்மனாம் பாளையம், மருதமலை உட்பட பல்வேறு பகுதிகளில் அவர் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார்.
பொதுமக்களிடம் அவர் பேசுகையில்,”
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியின்போது பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப் பட்டது. மக்களுக்கான அடிப்படை வசதிகள் தடையின்றி செய்து தரப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதம் ஆகியும் அடிப்படை வசதிகளை முறையாக நிறைவேற்றவில்லை. குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
நான் வெற்றி பெற்றால் இந்த வார்டில் திட்டப் பணிகளை விரைவாக நிறைவேற்றி முடிப்பேன். இது குப்பை இல்லாத வார்டாக மாற்றப்படும். அனைத்து தரப்பினரும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும். ,” என்றார்.
பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் சர்மிளா சந்திரசேகருக்கு உற்சாகமாக வரவேற்பளித்தனர். பெண்கள், வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் வார்டில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். சில பகுதிகளில் குடிநீர் சப்ளை குறைவாக இருப்பதாக புகார் வந்தது. வெற்றி பெற்ற பின்னர் அனைத்து திட்ட பணிகள் விரைவாக செய்து முடிக்கப்படும் என பொதுமக்களிடம் அவர் உறுதி அளித்தார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மருதமலையில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. ரோடு விரிவாக்கம், மழைநீர் வடிகால், கோயில் சீரமைப்பு போன்ற பல்வேறு திட்டப்பணிகள் நடத்தப்பட்டது. மக்களுக்கான அனைத்து திட்ட பணிகளையும் அதிமுக எந்த குறையும் இல்லாமல் நிறைவேற்றி கொடுத்தது. இனியும் பொது மக்களுக்கான நலத் திட்டங்களை அதிமுக நிறைவேற்றி தரும். நம்பிக்கையுடன் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என பிரசாரத்தின்போது நோட்டீஸ் கொடுத்து பேசினார்.
பிரச்சாரத்தின் போது கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் உடனிருந்தார்.