February 8, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு இரண்டாம் கட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா மற்றும் அரசியல்கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள 2312 வாக்குச்சாவடிகளுக்கு தேவைப்படும் 2322 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 20 சதவீதம் இருப்பு வைக்கப்பட்டுள்ள 484 வாக்குப்பதிவு இயந்திரங்களும் என மொத்தம் 2806 வாக்குப்பதிவு இயந்திரங்களும்,
வாக்குச்சாவடிகளுக்கு தேவைப்படும் 2303 கட்டுப்பாட்டுக் கருவிகள், 20 சதவீதம் இருப்பு வைக்கப்பட்டுள்ள 480 கட்டுப்பாட்டு கருவிகள் என மொத்தம் 2783 கட்டுப்பாட்டுக் கருவிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பின்னர் வாக்கு எண்ணும் மையமான அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின்போது மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உடனிருந்தார்.