February 11, 2022 தண்டோரா குழு
கோவை அருகே சாமியானா பந்தல் உரிமையாளர் வீட்டில் திருடிய வாலிபர்
பைக்கை விட்டு சென்றதால் சிக்கினார்.
மேட்டுப்பாளையத்தை அடுத்து சிறுமுகை சத்தி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (57).இவர் வீட்டின் முன்பு சாமியானா பந்தல் வாடகைக்கு விடும் கடை வைத்து நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.அப்போது, அவரது வீட்டின் பின்பக்க கதவை திறந்து மர்ம நபர் ஒருவர் புகுந்தார்.அந்த மர்ம நபர் வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் அங்கிருந்த செல்போனை திருடி கொண்டு வெளியே சென்றார்.
கதவு திறக்கும் சத்தத்தை கேட்டு பழனிசாமியின் மனைவி எழுந்து பார்த்தார்.அங்கு அந்த மர்ம நபர் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்.அவரின் சத்தத்தைக் கேட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.இதுகுறித்து பழனிசாமி சிறுமுகை போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது, பழனிசாமி வீட்டின் முன்பு ஒரு பைக் நின்றிருந்தது. அந்த பைக்கை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில், அந்த பைக் சிறுமுகை கெம்பே கவுண்டர் வீதியை சேர்ந்த ரமேஷ் (29) என்பவரது என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரமேஷின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு ரமேஷ் குடிபோதையில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில், ரமேஷ் பழனிசாமியின் வீட்டுக்கு சென்று திருடியதும், பழனிசாமியின் மனைவி சத்தம் போட்டதால் பைக்கை அங்கேயே விட்டு விட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரமேஷ் மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.