February 11, 2022 தண்டோரா குழு
கோவையில் மாணவியர் இஸ்லாமிய அமைப்பு (GIO) சார்பில் இன்று கோவை பத்திரிகையாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது.
இதில் மாணவியர் இஸ்லாமிய அமைப்பின் மாவட்ட தலைவி ருக்கிய தஸ்னீம் கூறுகையில்,
பாசிச சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தின் உடுப்பியில் உள்ள கல்லூரியில் இந்தியத் தாயின் மகளுக்கெதிராக நடைபெற்ற சங்பரிவாரக் கும்பலின் அத்துமீறிய செயலிற்கு மாணவியர் இஸ்லாமிய அமைப்பு ( GIO ) வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கின்றது.
அமைதியாக வரும் ஒரு முஸ்லிம் மாணவிக்கெதிராக சங்பரிவாரக் கும்பல் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டதும் , அதனை முழங்கிடச் சொன்னதும் , அந்த மாணவியின் கண்ணியமான ஆடையை கேலிப்படுத்தி , கேலிக்குரியதாக ஆக்கியதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான செயல். நம் நாட்டின் சிறப்புத் தன்மையே வேற்றுமையில் ஒற்றுமை தான் .
நம் நாட்டின் குடிமகன் ஒருவன் தனக்கு விருப்பமான மதத்தை தேர்ந்தெடுப்பதற்கும் , அதனடிப்படையில் தனது செயல்களை அமைத்துக் கொள்வதற்கும் அனுமதியும் சுதந்திரமும் வழங்கியிருக்கும் பட்சத்தில் அரசு நிர்வகிக்கும் கல்லூரிக்குள் அத்துமீறி குண்டர்களை ஏவி அராஜகம் செய்யும் சங்பரிவாரக் கும்பலின் மீது உடனடியாகக் கர்நாடக அரசு பெண்களுக்கெதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டின் இறையாண்மைக்கும் , அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினரின் மதத் தளங்கள் , அவர்களது மத அடையாளங்கள் மற்றும் அவர்களின் நம்பிக்கை ஆகியவற்றின் மீது தொடர்ந்து அவமதிப்புகள் நடைபெறுவது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நம் நாடு தொடர்ந்து பெண்களுக்கெதிரான பல்வேறு இழிசெயல்களை மதத்தின் பெயரால் சந்தித்து வருவதும் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது.
இச்செயல்களை பாஜக அரசும் வேடிக்கை பார்த்து வருவது அது முன்னெடுக்கும் மதவாத அரசியலை வெளிப்படுத்துகிறது.இத்தகைய போக்கிற்கு எதிராக அனைத்து நடுநிலைச் சிந்தனையாளர்களும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.நம் தேசத்தை அன்பும்,பாசமும் , நேசமும் மிக்க சமூகமாகக் கட்டியெழுப்ப அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் மாணவியர் இஸ்லாமிய அமைப்பு ( GIO ) சார்பாகக் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
இந்நிகழ்வில், செயலாளர் ஷஃபா மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பெண்கள் பிரிவு பொறுப்பாளர் ஜனாபா ஜஹீனா அஹ்மத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.