February 12, 2022 தண்டோரா குழு
தனது கணவரை பொய்யான வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக கோவை பேரூர் பேரூராட்சியில் அ.தி.மு.க.சார்பாக போட்டியிடும் பெண் வேட்பாளர் சரோஜினி,மாவட்ட ஆட்சியர்,மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை பேரூர் பகுதியில் வசிப்பவர் மாணிக்கம்,இவரது மனைவி சரோஜினி. தற்போது நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில்,பேரூர் பேரூராட்சியில் அ.தி.மு.க வேட்பாளராக 14 வது வார்டில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இவர் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு ஒன்றை அளித்துள்ளார்.மனுவில்,பேரூர் அங்காளம்மன் கோவில் வீதி ,பகுதியில் நானும் எனது கணவரும் கடந்த 45 ஆண்டுகளாக வசித்து வருவதாகவும்,கடந்த 9 ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து வருவதாக கூறி எனது கணவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
மேற்படி நானும் அங்கு சென்று பார்க்கையில் விசாரணை முடிந்து எனது கணவரை வீட்டுக்கு அனுப்பி விடுவதாக கூறி என்னை அங்கிருந்து செல்லும்படி கூறி அனுப்பிவிட்டார்கள். அதன் பின்பு எனக்கு எந்த தகவலும் சொல்வில்லை எனது கணவரை பல்லடம் சிறையில் அடைத்ததாக நான் இன்றைய நாளிதழ் பார்த்து தெரிந்துகொண்டேன்.
முன்பாகவே இது சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்பொழுது எவ்வித ஆவணமும்,பிடிவாரண்டும் இன்றி நில அபகரிப்பு வழக்கு என கூறி, எனது கணவரை கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது.இதன் அடிப்படையில் நான் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரித்த போது, இது சம்மந்தமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை எனவும், எனவே இது முழுக்க முழுக்க இது ஒரு சதி செய்யும் கைது படலம் என்று வெளிப்படையாகவே தெரிகிறது.எனவே தாங்கள் இது குறித்து விசாரணை செய்து எனது கணவரை விடுவித்து எனக்கும் எனது கணவருக்கும் நல்ல தீர்வு பெற்று தருமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் அ.தி.மு.க.வேட்பாளரின் கணவரை தேர்தல் நேரத்தில் கைது தொடர்பான இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.