February 15, 2022
தண்டோரா குழு
கோயம்புத்தூர் மாநகராட்சி 32 வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மகேஸ்வரன் என்பவர் தனது வார்டில் தேங்கியுள்ள சாக்கடைகளை சுத்தம் செய்து வாக்கு சேகரித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 32 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் மகேஸ்வரன் என்ற வேட்பாளர் இன்று தனது வார்டில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் தங்களது பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக சாக்கடை சுத்தம் செய்யாமல் அப்படியே இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மகேஸ்வரன் தனது ஆடைகளை கழட்டி விட்டு தனது மனைவியுடன் சேர்ந்து சாக்கடையில் இறங்கி அடைப்புகளை சரி செய்தார்.
அதன்பின்னர் அந்த தெருவில் இருந்த அனைத்து வீடுகளுக்கும் சென்று நோட்டீஸ்களை வழங்கி தனக்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தான் வெற்றிபெற்றால் அந்த வார்டில் உள்ள 56 தெருக்களிலும் அனைத்து சாக்கடைகளும் முழுமையாக உடனடியாக சுத்தம் செய்யப்படும் என தெரிவித்தார்.