February 17, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் மொத்தமாக 16 லட்சத்து 7,672 வாக்காளர்கள் உள்ளனர். வரும் 19-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு மாநகராட்சியால் தயாராக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூத் சிலிப்களை அரசியல் கட்சியினர் கையில் கொடுக்காமல், மாநகராட்சி அலுவலர்கள் வாக்காளர்கள் கையில் கொடுக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து பூத் சிலிப்களை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைளில் கோவை மாநகராட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘ஒவ்வொரு வார்டாக வீடு, வீடாக சென்று வாக்காளர்களிடம் பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. அப்போது சிலிப் பெற்று கொண்டதற்காக வாக்காளர்களிடம் கையெழுத்தும் வாங்கப்படுகிறது. இந்த பணியில் அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மாநகராட்சி 5 மண்டல அலுவலகங்களிலும் பூத் சிலிப் விநியோகம் குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.’’ என்றார்.