February 18, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட 9 சட்டமன்ற உறுப்பினர்கள் 7 மணி நேரத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.
ராம்நகரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்த நிலையில் இரவு வெளியே வந்த எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
நகர்புற தேர்தலை நேர்மையான முறையில் தேர்தல் நடத்திட வேண்டும் என ஜனநாயக முறையில் போராடினோம். ஆனால் காவல்துறை எங்களை கைது செய்துள்ளனர். தேர்தல் விதிக்கு எதிராகவும் கோவையில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக காவல்துறை உள்ளது என குற்றச்சாட்டு வைத்தார். .
மேலும் தேர்தல் அமைதியான முறையில் நடத்திட வேண்டும் என அதிமுகவினர் நினைக்கிறோம், ஆனால் வெளியூரில் இருந்து இறக்கப்பட்ட திமுகவினர் இன்னும் வெளியேற்றப்படவில்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கத்திகுத்து, அடிதடி நடைபெற்று வருகிறது. தேர்தலை நேர்மையான முறையில் சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்பதால் குண்டர்களை வைத்தும் , ஜனநாயக படுகொலை செய்யப்பட்டு தேர்தலை திமுகவினர் சந்திப்பதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
மேலும் நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் முடிவுகளை தாமதம் படுத்தாமல் யார் வெற்றி பெற்றார்களே அவர்களை அறிவிக்க வேண்டும் எனவும் மாற்றி அறிவிக்க கூடாது எனவும் தெரிவித்தார். மேலும் கூடுதலாக தேர்தல் அதிகாரி நாகராஜன் ஐ.ஏ.எஸ் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அவருடைய செயல்பாடும் வந்தால்தான் தெரியும் என தெரிவித்தார்.