December 23, 2016
தண்டோரா குழு
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நியமனத்திலும், வருமானவரித் துறை சோதனையிலும் மத்திய அரசின் எந்தவிதமான அழுத்தமோ, பழி வாங்கும் நடவடிக்கையோ இல்லை என பா.ஜ.க. தமிழ்நாடு மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நடைபெறும் வருமானவரித் துறை சோதனைகள் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. தவறு செய்தவர்கள் அதிகாரத்தில், ஆட்சியில் என யாராக இருந்தாலும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
புதிய தமிழக தலைமைச் செயலாளர் நியமனத்திலும், வருமானவரித் துறையினரின் சோதனையிலும் மத்திய பாஜக அரசின் எந்தவிதமான அழுத்தமோ, பழி வாங்கும் நடவடிக்கையோ இல்லை.
பதுக்கல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்படும் புதிய பணம் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் ஏற்படும் சிரமங்கள் விரைவில் சரிசெய்யப்படும். எதிர்பாராத விதமாக புதிய ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் பதுக்கப்பட்டிருக்கின்றன. இருப்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுத்து, அந்த நோட்டுகள் பறிமுதல் செய்யப்படும்.
கச்சத் தீவில் நடைபெறும் அந்தோனியார் திருவிழாவில் ஊடகங்களுக்கு மத்திய அரசு அளித்த அனுமதியை மாநில அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் மோடி மீதான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ராகுலை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
இவ்வாறு தமிழிசை கூறினார்.