February 24, 2022 தண்டோரா குழு
நாடு முழுவதும் தினத்தோறும் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெற விண்ணப்பிப்பதாகவும், இதனால் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் போது தாமதம் ஏற்படுவதாகவும், மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணைய ஆணையாளர் நீலம் ஷமி ராவ் தெரிவித்துள்ளார்.
மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் சார்பில் கருத்துகேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியின் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மத்திய ஆணையாளர் நீலம் ஷமி ராவ் கலந்து கொண்டார். கோவை பிராந்தியத்திற்கு உட்பட்ட 6 மண்டல அலுவலகங்கள் மற்றும் 13 மாவட்ட அலுவலகங்களின் பங்குதாரர்களான தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் சந்தேகங்களை முன்வைத்தனர்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழில்துறையினர் பேசும் போது,
அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து கோவை திருப்பூர் மாவட்ட பின்னலாடை நிறுவனங்களுக்கு பணிக்கு வரும் போது, ஆதார் இல்லாததால் பணியில் இணைக்க முடிவதில்லை என குற்றம்சாட்டினார்.
இதைத்தொடர்ந்து நீலம் ஷமி ராவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தொழில்துறையினருடன் கலந்துரையாடல் நடைபெற்றது எனவும் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்த நிலையில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து பயனுள்ள ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக சாதாரண பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியின் பலன்கள் கிடைப்பது தொடர்பாக தொழில்துறையினர் கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு பயன் ஏற்படும் எனவும் தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா காலத்தில் 72 லட்சம் பேர் வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெற ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாகவும், தினசரி 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பிப்பதால் இணையதள வேகம் குறைந்து பிரச்னைகள் ஏற்படுவதாகவும் இதனை மாற்று வழிகள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
கொரோனா காலகட்டத்தில் தொழிற்சாலைகள் கட்டத்தவறிய பி.எப்., தொகை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி தொழிற்சாலைகள் செயல்பட வேண்டும் எனக்கூறிய அவர், வங்கிகள் பிரச்னை அல்லது பெயர் மாற்ற பிரச்னைகள் இருந்தால் மட்டுமே இது போன்று நிகழ்வதாகவும், இவை சரிசெய்யப்படும் எனவும் தெரிவித்தார்.