February 28, 2022 தண்டோரா குழு
கோவை அவினாசிலிங்கம் பல்கலைகழகம் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றாக ஏ டபுள் ப்ளஸ் (A++)தரம் பெற்று,தேசிய அளவில் பெண்கள் பல்கலைகழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
கோவையில் பழமையான கல்வி நிறுவனமாக அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.பெண்களுக்கென பிரத்யேக கல்வி நிறுவனமாக செயல்பட்டு வந்த இந்த பல்கலைகழகத்திற்கு அண்மையில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவினர்,நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் குழுவினர் வழங்கிய அறிக்கையை தொடர்ந்து,அவினாசிலிங்கம் பல்கலைகழகம் (A++) ஏ டபுள் ப்ளஸ் தரச்சான்று பெற்று கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு பல்கலைக்கழக வளாக அரங்கில் நடைபெற்றது. இதில் பல்கலைகழகத்தின் வேந்தர் பேராசிரியர் தியாகராஜன்,நிர்வாக அறங்காவவலர் மீனாட்சி சுந்தரம்,துணை வேந்தர் முனைவர் பாரதி ஹரி சங்கர், பதிவாளர் முனைவர் கவுசல்யா ஆகியோர் பேசினர்.
அப்போது,தேசிய அளவில் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் எனவும் குறிப்பாக பெண்கள் பல்கலைக்கழகத்தில் 3.65 தர புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.குறிப்பாக இந்த தரவரிசை முன்னேற்றத்தால் உயர் கல்வி நிறுவனமாக செயல்பட உள்ள அவினாசிலிங்கம் பல்கலை கழகத்தில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் இது நல் வாய்ப்பாக அமையும் எனவும், இதற்கு காரணமாக இருந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மாணவியர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிப்பதாக கூறினர்.