March 3, 2022 தண்டோரா குழு
கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் நடந்து வரும் மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டுமான பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் மல்டிலெவல் கார்பார்க்கிங் ரூ.42 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் 11 ஆயிரம் சதுர மீட்டரில் 1,990 இருசக்கர வாகனங்கள், 979 நான்கு சக்கரவாகனங்கள் நிறுத்தும் வகையில் 4 தளங்களுடன் கூடிய மல்டிலெவல் பார்க்கிங் கட்ட ரூ.69.80 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது.ஆனால்,நிர்வாக காரணங்களால் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
இதைத்தொடர்ந்து,மல்டிலெவல் பார்க்கிங் கட்டிடத்தை மாநகராட்சி நிர்வாகத்தினரே கட்டி பராமரிப்புக்காக தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.இந்த மல்டிலெவல் கார் பார்க்கிங்கில் முதல் கட்டமாக 370 கார்கள் நிறுத்தும் அளவிற்கு 4 அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் நடந்து வந்த மல்டிலெவல் பார்க்கிங் கட்டுமான பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இம்மாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்,’’ என்றார்.